அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு: 2 வாரத்தில் தமிழக அரசு, யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதம் வெளியானது. 

இறுதி ஆண்டு மாணவர்கள் அரியர் தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. அரியர்  மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தால் எந்த தொழில், உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்காது. அரியர் மாணவர்களுக்கு  தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது  உத்தரவை மீறினால் அண்ணா  பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பறிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கிடையே, அரியர் மாணவர்கள் தேர்ச்சி என அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா  பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில், 

கலை, அறிவியல், எம்.சி.ஏ. பொறியியல் படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. 

 கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகத்தின் மதிப்பு கெடும். அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது  படித்து தேர்ச்சியடைந்தவர்களை சோர்வடையச் செய்யும். 25 பாடங்களுக்கு மேல் அரியர் வைத்தவர்கள் ஒரே நேரத்தில்  தேர்ச்சி பெற வைப்பதால் கல்வியின் தரம் குறையும். தேர்வின் மூலம் தான் போட்டித்திறன், செயல்திறன், நம்பகத் தன்மை  ஆகியவை பிரதிபலிக்கும். பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிட்டு அரியர் மாணவர்களை தேர்ச்சி  அடையச் செய்தது தவறு. எனவே, தமிழக அரசு அறிவித்த முடிவை ரத்து செய்யக்கோரி மனுவில் கோரியிருந்தார்.

 இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசு, யுஜிசி மற்றும் ஏ.ஐ.சி.டி.இ-க்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.