கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ‘டிவி’ வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அது தொடர்பாக தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து ஆலோசித்து, அரசின் முடிவை தெரிவிக்க, உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளுடன், அமைச்சர் செங்கோட்டையன், இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் பழனிசாமி, மெட்ரிக் இயக்குநர்கருப்பசாமி, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குநர் நாகராஜ முருகன் மற்றும் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி, பள்ளி கல்வி கமிஷனர் வெங்கடேஷ் மற்றும் இணை இயக்குநர்கள், இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பொதுத் தேர்வு தேதியை நிர்ணயித்தல், 40 சதவீத பாடக் குறைப்பு, பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு செய்தல், இரண்டாம் பருவ புத்தகம் வழங்குதல், ‘நீட்’ தேர்வில், அரசு பள்ளி மாணவர்களின் மதிப்பெண்ணை ஆய்வு செய்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.