வயித்துல இருக்குற கொழுப்பு குறையணுமா? இந்த காய்கறிகளை மட்டும் கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க…

அதிகப்படியான உடல் கொழுப்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதிலும் அடிவயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் மிகவும் ஆபத்தானவை மற்றும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். வயிற்று கொழுப்பு இதய நோய்களின் அபாயம் மற்றும் பிற நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். அதோடு இது இரத்த அழுத்தத்தையும் பாதிக்கும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்புக்கள் தான் உயர் இரத்த சர்க்கரை அளவிற்கு காரணமாகும். இதன் விளைவாக மோசமான செரிமானம் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. ஆகவே நீங்கள் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை குறைக்க தீவிரமான முயற்சியில் இறங்க வேண்டும்.

எடையைக் குறைக்க முயலும் முன் மனதில் கொள்ள வேண்டியவைகள்:

உங்கள் வயிற்றில் கொழுப்புக்கள் அதிகம் இருந்தால், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அதில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். மது மற்றும் புகைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும். போதுமான ஓய்வு மற்றும் தூக்கத்தைப் பெற வேண்டும். ஒருவரது உடல் எடை அதிகமாவதற்கு மன அழுத்தமும் முக்கிய காரணம் என்பதால், மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

உடற்பயிற்சி மிகவும் அவசியம்:

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்கவும், தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஒருவரது அதிகப்படியான உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவும். அத்துடன் ஆரோக்கியமான உணவுகளும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதில் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கீழே வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும் காய்கறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கொழுப்பை விரைவாக எரிக்க உதவும்.

பசலைக்கீரை:

பசலைக்கீரை அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி. இதில் கொழுப்புக்களைக் கரைக்கும் பண்புகள் இருப்பதாக ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகவே தொப்பையைக் குறைக்க இது பெரிதும் உதவி புரியும். அதற்கு பசலைக்கீரையை கடைந்து சாப்பிடுவது நல்லது. இந்த வழியில் சாப்பிட்டால், இந்த கீரை சுவையானதாக இருப்பதோடு, அதிகப்படியான கொழுப்புக்கள் குறைந்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பிராக்கோலி:

ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களும் ஏராளமாக உள்ளன. ப்ராக்கோலியில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் உடல் கொழுப்பை எதிர்த்துப் போராடும். இதில் உள்ள ஃபோலேட், உறுப்புக்களின் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

கேரட் :

கேரட்டுகள் கண்களுக்கு நல்லது என்ற வகையில் தான் மக்களிடையே பிரபலமானது. ஆனால் இந்த கேரட்டில் கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும் என்பது தெரியுமா? அதோடு கேரட்டில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காய் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதோடு, உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொண்டு, அதிகமாக பசிப்பதைக் கட்டுப்படுத்தும். இதில் கொழுப்பைக் கரைக்கும் பண்புகள் உள்ளன மற்றும் இது நள்ளிரவு நேர பசியையும் நீக்குகிறது. இதில் கலோரிகளும் குறைவு. எனவே எடையை வேகமாக குறைக்க நினைத்தால், தினமும் வெள்ளரிக்காயை சாப்பிடுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ் அதிகப்படியான வயிற்றுக் கொழுப்பைக் இழப்பதற்கு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது தொப்பைக் கொழுப்பை எதிர்த்துப் போராடுகிறது. ஆகவே பீன்ஸ் உடல் பருமன் அபாயத்தைக் குறைத்து, நல்ல உடல் எடைப் பராமரிப்பை ஊக்குவிக்கிறது.