உடல் பருமனை குறைத்தால் டைப் -2 நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்கலாம் -ஆய்வில் தகவல்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50% பேர் உடல் பருமன் கொண்டவர்கள் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் உடல் பருமன் ஏற்படுவதைத் தடுக்கும் பட்சத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்றும் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய உலகில் டைப் 2 வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் 3 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன

டைப் 2 நீரிழிவு நோய் கறுப்பினத்தவர், லத்தீன், அமெரிக்கன் இந்தியன், அலாஸ்கா நேட்டிவ், ஆசிய அமெரிக்கர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

உடல் பருமன் கொண்டவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், பரம்பரை (குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், மற்றவருக்கும் வர வாய்ப்பு), கர்ப்பகால நீரிழிவு நோய் உள்ளிட்டவை டைப் 2 நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணிகளாக இருக்கின்றன.

65 வயதிற்குக் குறைவானவர்களில் டைப் 2 நீரிழிவு நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், இதனால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சாதாரண நீரிழிவு நோய் உள்ளவர்களைவிட டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களால் இவ்வகை நீரிழிவு நோயைத் தடுக்க முடியும்.

இதில் உடல் பருமனைக் குறைப்பது டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பை வெகுவாக குறைத்துள்ளது என ஆய்வாளரும், சிகாகோவின் மெக்காவ் மருத்துவமனையின் மருத்துவருமான நடாலி ஏ. கேமரூன் தெரிவித்தார்.

மேலும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும் பட்சத்தில் 50% பேர் நீரிழிவு நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறினார்.