ஜுன் 1 முதல் 15-ம் தேதி வரை புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஜுன் 1 முதல் 15-ம் தேதி வரை புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஜுன் 1 முதல் 15-ம் தேதி வரை புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய பாடத்திட்டம் குறித்து ஜுன் 1 முதல் 15-ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளிக் குழந்தைகள் கோடை விடுமுறையை பயனுள்ள வழியில் செலவழிக்கும் வகை யில் பள்ளிக்கல்வித் துறையின் பொதுநூலக இயக்ககம் சார்பில் 32 மாவட்டங்களிலும் நூலகங்களில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் 30 வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

இந்த கோடைகால பயிற்சியை சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குநர் ஆர்.சுடலை கண்ணன், பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், பொதுநூலக இயக்குநர் (பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன், இணை இயக்குநர் எஸ். நாகராஜ முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்க விழாவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 3,145 மாணவ-மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் 9 இடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் நீட் தேர்வை சிறந்த முறையில் எதிர்கொள்வார்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்குமாறு மத்திய அரசிடம் அழுத்தம் கொடுக்கப்படும். வேறு மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு நிதியுதவி செய்வது குறித்து முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும்.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்ததும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். வரும் கல்வி ஆண்டில் (2018-19) 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி மே 4-ம் தேதி (நாளை) வெளியிடுகிறார்.

புதிய பாடத்திட்டம் குறித்து ஆசிரியர்களுக்கு ஜுன் 1 முதல் 15-ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்க முடியும். தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து கல்வி கட்டண நிர்ணயக்குழுவில் புகார் செய் தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.