‘பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு

‘பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு செய்யப்படும் பதிவுத்துறை தலைவர் தகவல்

‘பான்’ எண்ணின் உண்மைத்தன்மை உறுதி செய்த பிறகே பதிவு

‘பான்’ எண்ணை சரிபார்த்து அதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பிறகே சொத்து விற்பனை ஆவணங்கள் பதிவு செய்யப்படும் என்று பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்தார்.

வருமான வரி சட்டம் தமிழகத்தின் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ரூ.10 லட்சத்துக்கு மேற்பட்ட அசையா சொத்தை கிரயம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் தங்களின் ஆவணங்களில் குறிப்பிடும் ‘பான்’ எண்ணை பதிவு அலுவலர்கள் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வருமான வரி சட்டத்தின் 114-சி விதியில் கூறப்பட்டுள்ளது.

அதுபோன்ற சொத்துகளை விற்பவர்களும், வாங்குபவர்களும் ‘பான்’ எண்ணை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும். ‘பான்’ எண் இல்லாதவர்கள், படிவம் 60-ஐ அளிக்க வேண்டும்.

விவசாயம் அல்லாத ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்தை தாண்டும்போது, ‘பான்’ எண்ணுக்கு விண்ணப்பித்ததற்கான ஒப்புதல் எண்ணை குறிப்பிட வேண்டும். தனிநபர் அல்லாத கம்பெனி போன்றவைகளுக்கு ‘பான்’ எண் மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.

உண்மைத்தன்மை சொத்தை விற்பவர், வாங்குபவர் கொண்டு வரும் ‘பான்’ அட்டையை மட்டுமே பதிவு அலுவலரால் சரிபார்க்க முடிந்தது.

அந்த அட்டையின் உண்மைத்தன்மையை சரிபார்க்க முடியாமல் இருந்தது. தற்போது அட்டையின் உண்மைத்தன்மையை சரிபார்ப்பதற்கு ஏதுவாக ஸ்டார் 2.0 மென்பொருளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள், ஆவண எழுத்தர்கள், வக்கீல்கள் எழுதிய ஆவணங்களின் சுருக்கத்தை பதிவு செய்யும்போது ‘பான்’ அட்டையை உள்செலுத்தியதும் இணையவழியில் சரிபார்ப்பு நடைபெறும்.

அப்போது ‘பான்’ எண் பொருந்தாமல் இருப்பது தெரிய வந்தால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். பதிவு செய்யப்படாது அதை சரிசெய்து ஆவணங்களை உருவாக்குவதை மக்கள், ஆவண எழுத்தர், வக்கீல்கள் தொடரலாம். அதன் பின்னர் சரியான ‘பான்’ எண்ணை குறிப்பிட்டு ஆவணங்களை தயார் செய்ய வேண்டும்.

இதை பதிவு அலுவலர் மீண்டும் சரிபார்க்க வேண்டும். அது வேறு நபரின் ‘பான்’ எண் என்று தெரிய வந்தால், ஆவணத்தை பதிவு செய்யாமல், சரியான ‘பான்’ எண்ணை கேட்டு ஆவணத்தை திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.