அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது கோடை மழைக்கு வாய்ப்பு

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தகவல்

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது கோடை மழைக்கு வாய்ப்பு

அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 28-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

அனல்காற்றும் வீசியது. இரவு நேரங்களில் கூட வெப்பம் குறையாமல் இருந்தது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நீடிக்கிறது.

ஏற்கனவே வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அக்னி நட்சத்திரத்தை எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வெப்பத்தின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கிய உடன் வெப்பத்தின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் கோடைமழை பெய்வது வழக்கம். அந்தவகையில் தற்போது வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் கோடைமழை எப்போது வரும்? வெப்பத்தின் தாக்கம் எப்போது குறையும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- கத்திரி வெயில் நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை இருக்கும்.

அடுத்த 3 மாதத்துக்கு வழக்கத்தை விட 0.5 முதல் 1 டிகிரி வரை வெப்பம் அதிகம் பதிவாக வாய்ப்பு உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து அனல்காற்று வீச வாய்ப்பு இருக்கிறது. ஈரப்பதம் குறைந்து வறண்ட வானிலை காணப்படுவதால் தமிழகம், புதுச்சேரியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

சென்னையை பொறுத்தவரை அனல் காற்று வீசுவதுடன் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடலோர மாவட்டத்தில் காற்றின் திசையை பொறுத்து வெப்பநிலை மாறும். 107 டிகிரி பரவலாக தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் 107 டிகிரி வரை வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் கடல் காற்று புகுவதால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது.

ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு நிலப்பரப்பில் வீசும் காற்று, கடல் காற்றை நிலப்பரப்புக்குள் புகாமல் தடுத்து விடும்.

இதனால் அனல் காற்று வீசும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். குளிர்ச்சி தரும் உணவுகள் அக்னி நட்சத்திர பாதிப்பை தவிர்க்க இயற்கை மருத்துவர்கள், ஜோதிடர்கள் ஆலோசனை கூறியதாவது:- அக்னி நட்சத்திர காலத்தில் தொடர்ந்து 25 நாட்கள் வெப்பத்தால் நம் உடல் பாதிக்கப்படாமல் இருக்க குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெயிலில் அலைவதை முடிந்த அளவுக்கு மக்கள் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கோடைகால வெப்ப நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடிப்பது, காய்கறி, பழங்கள் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வது நலம்.

வெயில் காலத்தில் திட உணவை காட்டிலும் திரவ வகை உணவுகளை அதிகளவில் சேர்க்க வேண்டும்.

இயற்கை பழரசங்களை அதிகம் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, பதநீர் பருக வேண்டும். அதிக கார உணவு வகைகளையும், மாமிச உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வசதி உள்ளவர்கள் இலவச தண்ணீர், மோர் பந்தல்களை அமைத்து எளியவர்களுக்கு வழங்குவதன் மூலம் கோடி புண்ணியம் பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.