அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம்

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம்

அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதனால் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்திலேயே அதிகபட்சமாக வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இதற்கிடையில், பஞ்சாங்க கணிப்புப்படி பரணி நட்சத்திரத்தில் இருந்து, கிருத்திகை நட்சத்திரம் நோக்கி சூரியன் பயணிக்கும் காலமான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.

இந்த காலகட்டத்தில் சூரிய ஒளி நேரடியாக பூமி மீது விழும். அதனால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அடுத்து வரும் 24 நாட்களுக்கு தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளது.

இந்த கத்திரி வெயில் வரும் மே 28-ம் தேதி நிறைவடைகிறது. கத்திரி வெயில் காலத்தில் வெப்பம் அதிகரிப்பது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “வானிலை ஆய்வு மைய தரவுகளில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்ற வார்த்தையே இல்லை” என்றனர்.

வானிலை நிலவரம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: 6 நகரங்களில் 100 டிகிரி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக திருச்சியில் 104.54, திருத்தணியில் 103.46, வேலூரில் 103.28, கரூர் பரமத்தியில் 102.2, மதுரையில் 101.48, பாளையங்கோட்டையில் 100.4 ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில், வழக்கமான வெப்பநிலையை விட 5.4 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும்.

அதன் காரணமாக அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி அதிகபட்சமாக சிவகங்கையில் 13 செமீ, கோவை மாவட்டம் பீளமேட்டில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.