நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில மையங்களில்தான் எழுத வேண்டும் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில
மருத்துவப் படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடக்கவிருக்கிறது.

இதற்கு இன்னமும் மூன்று நாள்களே உள்ள நிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்திருக்கிறது தேர்வை நடத்தும் இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்தது உச்சநீதிமன்றம்.

இதன்மூலம் கடந்த ஆண்டு கடும் இழுபறிக்குப் பின்னர் தமிழக மாணவர்கள், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்.

இந்த ஆண்டு தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்த போது, தமிழக மாணவர்களுக்கு தெலங்கானாவில் நீட் தேர்வு மையத்தை ஒதுக்கியது சி.பி.எஸ்.இ. இதனைச் சுட்டிக்காட்டி தமிழகத்தில் 10 மையங்களை ஒதுக்கீடு செய்தது சி.பி.எஸ்.இ. இரண்டு வாரங்களுக்கு முன்பு நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கியபோது, மாணவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வு மையங்களை கேரளாவிலும், ராஜஸ்தானிலும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, `தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். தனது தீர்ப்பில் `அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்கள் மனதளவிலும், பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்படுவர்.

எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்குத் தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இதனை எதிர்த்து சி.பி.எஸ்.இ, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதில், `தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை’ என்றும், `தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது’ என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவிக்க, இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இன்று தனது தீர்ப்பில், `ஏற்கெனவே ஒதுக்கிய தேர்வு மையங்களில்தாம் நீட் தேர்வு எழுத வேண்டும்’ என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பில் மூலம் தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று நீட் தேர்வு எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு ஏதேனும் மனுத்தாக்கல் செய்யுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.