நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்குத் தட்டுப்பாடு மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தி

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான என்சிஇஆர்டி

நாடு முழுவதிலும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட தனியார் பதிப்பகங்கள், தரமற்ற தாள்களில் அந்தப் பாடப்புத்தகங்களை சட்டவிரோதமாக அச்சடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சிபிஎஸ்இ முறையிலான கல்விக்கூடங்களுக்காக என்சிஇஆர்டி சார்பில் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பல பள்ளிகள் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை என்சிஇஆர்டி மையத்திலிருந்து நேரடியாகப் பெறுகிறார்கள். இதுதவிர, என்சிஇஆர்டி அங்கீகாரம் பெற்ற சுமார் 300 தனியார் பாடப்புத்தக நிறுவனங்கள், இந்தப் புத்தகங்களை வாங்கி விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், நிகழ் கல்வியாண்டுக்கான புத்தகங்கள், டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டன. எனினும், தற்போது என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நிகழாண்டில், சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, டெல்லியில் உள்ள சில தனியார் பதிப்பகங்கள் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை நகல் செய்து சட்டவிரோதமாக அச்சடித்து விற்பனை செய்கின்றனர்.

இவற்றில் என்சிஇஆர்டியின் முத்திரையும் இடம்பெறவில்லை. மேலும், அந்தப் புத்தகங்களில் இருக்கும் தாள்களின் தரமும் குறைந்து காணப்படுகிறது. இதனால், மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பான புகார்கள், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கும் அண்மையில் கிடைக்கப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, என்சிஇஆர்டி அதிகாரிகளை அழைத்து மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து,‘தி இந்து’விடம் என்சிஇஆர்டி அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘நிகழாண்டில் என்சிஇஆர்டி புத்தகங்களின் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எனவே, தனியார் சிலர் பயன்பெறும் வகையில், புத்தகத் தட்டுப்பாட்டை உருவாக்கும் நோக்கத்திலேயே தேவையான அளவில் புத்தகங்கள் அச்சிடப்படவில்லை. டெல்லியில் மத்திய அரசு அலுவலர்களுக்கான புத்தக விற்பனை முகாம்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் அதிகாரிகள் நேரடியாக புகார் அளித்துவிட்டனர். இதுகுறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனர்.