நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்

நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரயில் கட்டணம், ரூ.1,000 நிதியுதவி முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் உடன் செல்பவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.1,000 வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் – AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கட்டாயமாக்கப்பட்டது.

2018-19ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாளை (மே 6-ம் தேதி) நடக்கிறது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் 150 நகரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் 230-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடக்கிறது.

சென்னையில் மட்டும் 32-க்கும் மேற்பட்ட மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து 1.47 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழக மாணவர்கள் 1,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

5,371 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இதுபற்றிய சரியான விவரம் தெரியவில்லை.

இதற்கிடையில், தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நீட் தேர்வு எழுதுவதற்காக வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்துக் கட்டணம், தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமி மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினர்.

வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கான பயணக் கட்டணத்தை வழங்க இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்து, வெளி மாநிலத்தில் நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடன் செல்லும் நபர் ஒருவருக்கு பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணமும், பேருந்தில் செல்பவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்துக்கு மிகாமலும், இதர செலவினங்களுக்காக மாணவர் ஒருவருக்கு தலா ரூ.1,000 வீதமும் வழங்கப்படும். தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து இதை அவர்கள் முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம்.

தேர்வு எழுதி திரும்பிய பின், உரிய ரசீதுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தேர்வு எழுதி திரும்பிய பிறகு, பயணம் மேற்கொண்டதற்கான உரிய ரசீதுகளைக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

நீட் தேர்வு நுழைவுச்சீட்டு, படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை நகல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.

இதில் சிரமம் ஏற்பட்டால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டோ, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் கட்டணமில்லா தகவல், ஆலோசனை மைய தொலைபேசி எண்ணான 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ உரிய உதவிகளை பெறலாம். இவ்வாறு முதல்வர் தெரிவித் துள்ளார்.