பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு விலை

பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கவில்லை பள்ளிகள் திறந்தபிறகாவது வழங்கப்படுமா?

பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த ஆண்டு விலை
கடந்த ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கு விலை இல்லா சைக்கிள்கள் அரசால் வழங்கப்பட வில்லை. பள்ளிக் கூடம் திறந்த பிறகாவது சைக்கிள் வழங்கப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விலை இல்லா சைக்கிள் மாணவர்களின் படிப்பு பொருளாதாரம் காரணமாக தடைபட்டுவிடக்கூடாது என்று அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கு விலை இல்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், லேப்டாப், சைக்கிள் உள்பட 14 வகை பொருட்களை தமிழக அரசு வழங்கிவருகிறது.

சைக்கிள் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. அறிவித்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 2017-2018 கல்வி ஆண்டில் மட்டும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு தமிழகம் முழுவதும் சைக்கிள்கள் வழங்கப்படவில்லை.

பள்ளிகள் திறந்தபிறகாவது… இதுகுறித்து பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ள அரசு பள்ளி மாண வர்கள் சிலர் கூறியதாவது:- நாங்கள் பிளஸ்-1 படிக்கும்போது சைக்கிள்கள் கொடுக்கவில்லை.

பிளஸ்-2 படிப்பதற்காக பள்ளிகள் திறந்தபிறகாவது சைக்கிள்கள் கொடுத்தால் அந்த சைக்கிளில் பள்ளிகளுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும். பஸ்சில் செல்வதைவிட சைக்கிள்களில் செல்வது தான் எங்களுக்கு எளிது.

சைக்கிள்களுக்கு டெண்டர் இன்னும் விடப்படவில்லை. இந்த கல்வி ஆண்டு பிளஸ்-1 மாணவர்களுக்கும் சேர்த்து டெண்டர் விட்டால் நல்லது.

சைக்கிள்கள் உதிரிபாகங்களாக ஒரு மாவட்டத்திற்கு 4 பள்ளிகளில் இறக்கப்பட்டு அங்கு சைக்கிளாக உருவாக்கப்படும்.

அதன்பின்னரே மாணவர்களுக்கு வழங்குவார்கள். எனவே எப்படியும் மாணவர்களுக்கு வழங்க 6 மாதம் ஆகும்.

அதுவரை பஸ்சில் தான் சென்றுவர வேண்டும். எனவே சைக்கிள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர். லேப்-டாப் பிளஸ்-2 நீட் பயிற்சி மையத்திற்கு சென்று நன்றாக படித்த மாணவர்களுக்கு மட்டும் லேப்-டாப் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம், தேனி மாவட்ட பிளஸ்-2 மாணவர்கள் அனைவருக்கும் லேப்-டாப் வழங்கப்பட்டுவிட்டது.

மற்ற மாவட்ட மாணவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. பிளஸ்-2 முடித்த மாணவர் கள் கூறுகையில், விரைவில் மற்ற மாவட்ட மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்க அரசு முன்வரவேண்டும் என்றனர்.