ஜாக்டோ-ஜியோ உச்சகட்ட போராட்டம்.7600 பேர் கைதானதாக போலீசார் அறிவிப்பு.

ஜாக்டோ-ஜியோ உச்சகட்ட போராட்டம்.7600 பேர் கைதானதாக போலீசார் அறிவிப்பு.

ஜாக்டோ-ஜியோ உச்சகட்ட போராட்டம்.7600 பேர் கைதானதாக போலீசார் அறிவிப்பு.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.

இதற்காக சேப்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்திய காட்சி. சென்னை கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 7600 பேரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டத்தை அரசு முறியடித்த போதிலும் போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் அறிவித்து உள்ளனர்.

சென்னை, மே.9- புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ‘ஜாக்டோ-ஜியோ’ தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும். 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக ரொக்கமாக வழங்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

தடுத்து நிறுத்தினர் இதன்படி, நேற்று காலை 9.30 மணிக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே கூடி அங்கிருந்து கோட்டை நோக்கி சென்று முற்றுகை போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், போராட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டியது. தமிழகம் முழுவதும் இருந்து சென்னைக்கு வரும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் அந்தந்த மாவட்ட பகுதிகளின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சோதனைகள் மேற்கொண்டு தடுத்து நிறுத்தினர்.

மேலும் பஸ் மற்றும் வேன்களுக்கு சென்னைக்கு வரும் உரிமத்தையும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். போலீசார் சோதனை இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பஸ்கள், ரெயில் கள் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை முதலே கோயம்பேடு பஸ்நிலையம், சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் போலீசார் கடுமையான சோதனை மேற்கொண்டனர்.

அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என தெரிய வந்தால் அவர்களை வளைத்து வளைத்து கைது செய்து அருகில் உள்ள அரசு பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

எனினும், போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நேற்று காலை 7 மணி முதலே சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி வருகை தந்த வண்ணம் இருந்தனர்.

அங்கும் தயாராக நின்றிருந்த போலீசார் முற்றுகை போராட்டத்துக்கு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக கைது செய்து வேன் மற்றும் பஸ்களில் ஏற்றி அருகில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

தீவிரம் அடைந்தது இந்த நிலையில், காலை 9 மணிக்கு மேல், போராட்டம் தீவிரம் அடைந்தது.

திருவல்லிக்கேணி பகுதியை சுற்றி இருந்த ஊழியர் சங்க கட்டிடங்கள் மற்றும் தனியார் விடுதிகளில் ஏற்கனவே தங்கி இருந்தவர்கள் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பெல்ஸ் சாலை, எல்லீஸ் சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலைய சாலைகள் வழியாக விருந்தினர் மாளிகை நோக்கி அணி அணியாக வந்தனர்.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், கு.வெங்கடேசன், மு.அன்பரசு, கு.தியாகராஜன், ச.மோசஸ் உள்பட நிர்வாகிகளும் அங்கு வந்தனர்.

அவர்கள் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்வது, நிலுவைத்தொகையை வழங்குதல் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற வண்ணம் இருந்தனர்.

அதே நேரத்தில் திருவல்லிக்கேணி பகுதிகளில் இருந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கும்பல், கும்பல்களாக வந்தனர்.

போக்குவரத்து முடக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் பஸ்களில் ஏற்றி மண்டபங்கள், பள்ளிகளுக்கு கொண்டு செல்லும் வழியில், வாலாஜா சாலையை கடக்கும் முன்னரே அவர்கள் பாதி வழியில் இறங்கி, போராட்டத்துக்காக வருபவர்களுடன் நடக்க தொடங்கினார்.

போராட்டத்துக்கு வந்தவர்கள் ஆங்காங்கே டீ, ஜூஸ் கடைகளில் பானங்களை பருகிவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் விழி பிதுங்கிய போலீசார், ஒரு கட்டத்தில் டீ, ஜூஸ் கடைகளை அடைக்க உத்தரவிட்டனர்.

என்றாலும் போராட்டமானது 12 மணி வரை நீடித்தது. அதுவரை வாலாஜா சாலையில் போக்குவரத்து முடங்கியது. அந்த வழியாக பஸ்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள் அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகே இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் காரணமாக நேற்று அண்ணாசாலை, சென்னை சென்டிரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்பட்டது.

தலைமை செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்லும் அனைத்து வழிகளும் போலீசாரின் தீவிர கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

தலைமை செயலகமும் முள்வேலி தடுப்புகள் அமைத்து தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

தலைமை செயலகத்துக்குள் செல்லும் வாகனங்களும், தலைமை செயலகம் வழியாக செல்லும் வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

இதனால் முற்றுகை போராட்டத்தை அரசு முறியடித்தது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலீசார் கைது செய்து, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, அண்ணாசாலையில் உள்ள மதரசா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடம் மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

1,700 பெண்கள் உள்பட 7,600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்ற தலைவரும், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளருமான மீனாட்சிசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜாக்டோ-ஜியோ 8 மாத காலமாக 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லாததால், இன்று (நேற்று) கோட்டை நோக்கி முற்றுகையிடும் போராட்டத்துக்கு வந்துள்ளோம்.

கோட்டை முற்றுகை போராட்டம் என்பது உச்சகட்ட போராட்டம் ஆகும். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் இந்த போராட்டத்தை தடைசெய்வதற்காக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே வருகின்ற வழிகளில் எல்லாம் வாகனங்களை மறித்து எங்கள் அமைப்பினரை கைது செய்து இருக்கிறார்கள்.

இரவோடு, இரவாக வீட்டுக்குள் புகுந்து கைது செய்து இருக்கிறார்கள். தீவிரவாதிகளை போல ஆசிரியர்களை கருதுகிறார்கள்.

நடைபெறுவது ஹிட்லர் ஆட்சியா? அல்ல எடப்பாடியார் தான் அப்படி மாறிவிட்டாரா? என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படுகிறது.

எனவே எந்த நேரத்திலும் நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம். 4 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை கோட்டை முற்றுகை போராட்டத்தை தவிர்க்க மாட்டோம்.

எங்களை அழைத்து பேசாமல், ஒரு விளம்பரத்தை கொடுத்து எங்களை பொதுமக்களிடம் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதனை நாங்கள் கண்டிக்கிறோம். இனிமேலாவது எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தொடர்ந்து போராடுவோம், இறுதிவரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார். காத்திருப்பு போராட்டம் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் உள்பட பல்வேறு இடங்களில் தங்க வைத்தனர்.

பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர். ஆனால், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்தவர்கள், தாங்கள் வெளியே செல்ல முடியாது என்றும், அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே வெளியில் செல்வோம் என்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், போலீசாருடன், கமாண்டோ படைகளும் அதிக அளவில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் குவிக்கப்பட்டனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே தங்க வைக்கப்பட்டிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசினார்கள்.