திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் – ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் - ஸ்டாலின்
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று கூறினார்.

மேலும் ஜாக்டோ ஜியோவினர் போராட்டம் அறிவித்தவுடன், அவர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத்தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறிய ஸ்டாலின், போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தும் முன்பே தமிழக அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதனிடையே போராட்டம் நடத்திய ஜாக்டோ- ஜியோவினரை வலுக்கட்டாயமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை காவல்துரையினர் கைது செய்வது பண்பாடற்ற ஜனநாயக விரோத செயல் என்று கூறிய ஸ்டாலின், அரசு ஊழியர்களை பயங்கரவாதிகளைபோல் வலைவீசி தேடி கைது செய்வதா என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இதையடுத்து தமிழகத்தில் அரசாங்கம் ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை என்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார். மேலும் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதை விளம்பரம் செய்து ஜெயக்குமார் இழிவுப்படுத்துகிறார் என்றும் துப்பாக்கி , தடியை காட்டி அரசு ஊழியர்களை வழிக்கு கொண்டு வர முதல்வர் பகல் கனவு காண்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் அரசு நிர்வாகத்தை தாங்கி நிற்கும் தூண்கள் என்பதை உணர மறுக்க கூடாது என்றும் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.