மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க இணையத்தில் தேர்வு

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களின் தற்கொலையைத் தடுக்க இணையத்தில் தேர்வு

உயர் நீதிமன்றத்தில் செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளின் பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளங்கள் மூலமாகவும் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாகவும் வெளியிடப்படுகின்றன.

இந்த தேர்வு முடிவுகளை பார்க்கும் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்கள் தேர்வு தோல்வியால் விரக்தியடைந்து தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர்.

ஆண்டுதோறும் மாணவர்களின் இந்த தற்கொலை மரணங்கள் தடுக்க முடியாததாகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகவும் இருந்து வருகிறது.

இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என ஏற்கெனவே கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியிருந்தேன்.

அதில், ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்குப் பதிலாக அந்தந்த பள்ளி மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து, அவர்களிடம் தேர்வு முடிவுகளை தெரிவிக்க வேண்டும்.

இதன்மூலம் தோல்வி விரக்தியிலோ அல்லது பெற்றோர் திட்டுவார்கள் என்ற பயத்திலோ மாணவர்கள் தற்கொலை என்னும் முடிவை எடுப்பது தடுக்கப்படும்.

அத்துடன் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பெற்றோரும் ஆறுதல் கூறி தன்னம்பிக்கையை ஊட்ட முடியும்.

தோல்வியடைந்த மாணவர்களுக்கு உளவியல் ரீதியாகவும் ஆலோசனைகளை வழங்க முடியும் என தெரிவித்திருந்தேன்.

ஆனால் இந்த மனுவை இதுவரை பரிசீலிக்கவில்லை. எனவே எனது கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது நீதிபதிகள், ‘‘இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’’ என அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.