வங்கிக் கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படி

வங்கிக் கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க முடியும்? உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

வங்கிக் கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள் பொறியியல் படி

வங்கிக் கணக்கு இல்லாத கிராமப்புற மாணவர்கள், டெபிட் கார்டு மூலம் பொறியியல் படிப்புக்கு எப்படி ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அரசாணையை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரசன் மற்றும் பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட விடுமுறை கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு ஆன்லைனில் மட்டுமே மாணவர் சேர்க்கை என கடந்த ஆண்டே அறிவித்துவிட்டோம்.

மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் சென்னை வந்து செல்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை கருத்தில்கொண்டே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும், கலந்தாய்வில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆங்கில அறிவோ, கம்ப்யூட்டர் அறிவோ அவசியமில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலே எளிதாக விண்ணப்பித்து விடலாம்.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, போதிய எண்ணிக்கையில் ஆட்களையும் நியமித்துள்ளோம்.

ஆன்லைன் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆன்லைனால் கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கடந்த மே 3-ம் தேதியில் இருந்து 7-ம் தேதி வரை 30 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள் ளனர். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் தரப்பில், ‘‘ஆன்லைனில் விண்ணப்பிக்க வங்கிக் கணக்கும், விண்ணப்பத் தொகையை செலுத்த டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் தேவை. ஆங்கிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

இது கிராமப்புற மாணவர்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தும்’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் கிராமப்புற மாணவர்கள் பலருக்கு வங்கிக் கணக்குகூட கிடையாது.

வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?’’ என கேள்வி எழுப்பினர். இதற்கு மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத் தொகையை நேரடியாகவோ அல்லது டிடி-யாகவோ செலுத்த அனுமதிக்கலாமா, தமிழில் விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டை இன்று (மே 10) பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.