விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு

விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு ரூ.5 லட்சமாக உயர்கிறது மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு

விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு
சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை வரம்பை 10 மடங்கு அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சாலை விபத்துகளில் சிக்கி ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்.

இப்போதுள்ள மோட்டார் வாகன சட்டப்படி, சாலை விபத்தில் சிக்கி மரணமடைவோரின் குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரமும் உடல் உறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்தால் ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.

குறிப்பாக இந்த சட்டத்தை காப்பீடு நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும்.

அதேநேரம், விபத்தின் தன்மை, பாதிக்கப்பட்டவரின் வயது, வருமானம், அவரை நம்பி இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பொறுத்து இழப்பீடு தொகை வேறுபடும். எனினும், காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குடும்பத்தினர் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை.

இதனால் பெரும்பாலானவர்கள் கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி வாகன விபத்து உரிமை தீர்ப்பாயத்தை (எம்ஏசிடி) அணுகி வருகின்றனர். விலைவாசி உயர்வுக்கேற்ப, குறைந்தபட்ச இழப்பீடு தொகையை அதிகரிக்கலாம் என இந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தாலும், கடந்த 24 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை.

இந்நிலையில், விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச இழப்பீட்டு தொகையை ரூ.5 லட்சமாக அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும் இந்த குறைந்தபட்ச தொகை ஆண்டுதோறும் 5 சதவீதம் உயரும். இதுபோல லேசாக காயமடைவோர், உடல் உறுப்புகள் நிரந்தரமாக செயலிழப்பவர்களுக்கு வழங்கப்படும் தொகையை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், பாதிக்கப்பட்டவர்கள் எம்ஏசிடி தீர்ப்பாயத்தை அணுகி தகுதி இருந்தால் கூடுதல் இழப்பீட்டைப் பெறவும் முடியும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் இழப்பீடு கோரி தீர்ப்பாயத்தை அணுகுவதைக் குறைக்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் வாகன உரிமையாளர்கள் செலுத்த வேண் டிய 3-ம் தரப்பு காப்பீட்டு தொகை யும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.