நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 தவறான கேள்விகள் பாதி

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 தவறான கேள்விகள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் டெக் ஃபார் ஆல் அறக்கட்டளை நிறுவனர் கோரிக்கை

நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 தவறான கேள்விகள் பாதிநீட் தேர்வில் அளிக்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் 49 கேள்விகள் பிழையுடன் இருந்ததால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென டெக் ஃபார் ஆல் அறக்கட்டளை நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET – நீட்) தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 பேர் எழுதினர். இதில், தமிழ் மொழியில் மட்டும் 24,500 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

தமிழ் மொழியில் கேட்கப்பட்ட வினாத்தாளில் இருந்த கேள்விகள் தவறான மொழி பெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக டெக் ஃபார் ஆல் அறக்கட்டளை நிறுவனர் ஜி.பி.ராம்பிரகாஷ் சென்னையில் நேற்று கூறியதாவது: சமீபத்தில் நடந்த மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் மொத்தம் 68 தவறுகள் உள்ளன.

49 கேள்விகள் முற்றிலும் தவறாக இருக்கின்றன. இதனால், தமிழ் மொழியில் தேர்வு எழுதிய 24,500 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வில், ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 180 கேள்விக்கு 720 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

பிரதமர் தலையீடு அவசியம் 49 கேள்விகள் பிழைகளுடன் இடம்பெற்றிருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கு 196 சலுகை மதிப்பெண்களை வழங்க வேண்டும்.

இதுதொடர்பான தகவலை தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளோம்.

அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகிய அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம்.

இந்தப் பிரச்சினையை சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வு வாரியம் தாமாக முன்வந்து தீர்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்துக்குச் சென்றால் முடிவு கிடைக்க காலதாமதம் ஏற்படும். முக்கியத் தேர்வு என்பதால் இந்தப் பிரச்சினையில் பிரதமர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.