விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்போது அனைத்து

விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்போது அனைத்துப் பள்ளிகளும் தூய்மையாக தயார் நிலையில் இருக்க வேண்டும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்

விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்போது அனைத்து

மாணவர்கள் ஜூன் 1-ம் தேதி பள்ளிகளுக்கு வரும்போது, அனைத் துப் பள்ளிகளும் தூய்மையாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 1-ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

அன்று, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, பள்ளி வளாகம், தூய்மையாகவும், நேர்த்தியாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளைக் கிருமி நாசினியைப் பயன்படுத்தி தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

கழிவறைகளில் பழுதைச் சரி செய்து, தூய்மையாக வைக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு குடிநீர் குழாய், கழிவறை, சிறுநீர் கழிப் பறைகள் இருக்க வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள புதர்கள், கற்குவியல்களை அப்புறப்படுத்தி, பள்ளங்கள் இருந்தால், அதை மூட வேண்டும்.

கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர் தொட்டிகளை முறையாக மூட வேண்டும். வகுப்பறைகளைத் தூய்மைப் படுத்தி, மின் சாதன பழுதுகளை நீக்க வேண்டும்.

பள்ளிக் கட்டிட மேற்கூரை பழுதுகளையும் சரி செய்ய வேண்டும். வகுப்பறை கதவு, ஜன்னல்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளன்று, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அன்றே ஆசிரியர் மற்றும் வகுப்புகளுக்கான கால அட்டவணை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.