ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு

ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய மண்டல உதவி இயக்குநர் பணியிடங்கள் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு

ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய மண்டல உதவி இயக்குநர் பணியிடங்களை மாவட்டம்தோறும் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இச்சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. மாநிலத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி அவ்வப்போது நிரப்ப வேண்டும்.

2017-ல் பொது கலந்தாய்வில் பணியிட மாறுதல் ஆணை பெற்று, பணிவிடுப்பு செய்யப்படாத பழங்குடியினர் பள்ளி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்து, புதிய பள்ளிகளில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆசிரியப் பணியில் முத்திரை பதிக்கும் ஆசிரியர், ஆசிரியைகளை கவுரவிக்கும் வகையில் டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வேண்டும்.

ஆதி திராவிடர் நலத் துறை பள்ளிகளில் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய மண்டல உதவி இயக்குநர் பணியிடங்களை மாவட்டம் தோறும் ஏற்படுத்த வேண்டும்.

ஆதி திராவிடர் நலத் துறையின்கீழ் 826 பள்ளிகளும், 96 நடுநிலை, 117 உயர்நிலை, 105 மேல்நிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன.

இப்பள்ளிகளை நிர்வகிக்க, 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து 7 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் மட்டுமே உள்ளன.

இத்துறையில் கல்வி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் ஒன்றுகூட இல்லாதநிலை பல ஆண்டுகளாக நிலவுகிறது.

இதனால் இத்துறையின் கீழ் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

எனவே குறைந்தபட்சம் 3 மாவட்டத்துக்கு ஒரு மண்டல உதவி இயக்குநர் பணியிடம் என, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் (பதவி உயர்வு இன்றி) ஒரு பணியிடத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.