10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது தமிழ் முதல் தாள் கடினமாக இருந்தது மாணவ – மாணவிகள் கருத்து

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

 

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது தமிழ் முதல் தாள் கடினமாக இருந்தது மாணவ – மாணவிகள் கருத்து | தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.

முதல் நாளான நேற்று நடந்த தமிழ் முதல் தாள் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ மாணவியர்கள் தெரிவித்தனர். பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 36,649 பேர் தேர்வில் கலந்துகொண்டனர். இதற்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தின் பல்வேறு சிறைகளைச் சேர்ந்த 186 சிறைவாசிகளும் இந்த தேர்வை எழுதினர். அவர்களுக்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை ஆகிய மத்திய சிறைகளில் சிறப்பு தேர்வு மையங்களை அரசு தேர்வுத்துறை அமைத்திருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 9 மணிக்கே மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பெரும்பாலான மாணவ-மாணவிகளுடன் பெற்றோரும், ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 6,900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட ஆய்வு அலுவலர்களும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை நடத்தினர். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களை ஆய்வுசெய்தனர். நேற்று நடைபெற்ற தமிழ் முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ-மாணவிகள் கவலையுடன் கூறினர்.

பொதுத்தேர்வுக்கு வரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல கேள்விகள் கேட்கப்படவில்லை. நேரடி கேள்விகளாக இல்லாமல் சிபிஎஸ்சி-யைப் போன்று மறைமுகமாக பாடத்தில் உள்ள வரிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் திணறினர். வழக்கமாக இல்லாமல் புதிய முறையில் கேள்விகள் கேட்கப்படும் என்று முன்கூட்டியே அறிவித்திருந்தால் அதற்கேற்ப தேர்வுக்கு தயாராகியிருக்கலாம் என்று சில மாணவர்கள் ஆதங்கப்பட்டனர். எஸ்எஸ்எல்சி தேர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சி நடத்தி வரும் 70 பள்ளிகளைச் சார்ந்த 3 ஆயிரத்து 218 மாணவியர் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 96 மாணவ, மாணவியர்கள் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை நேற்று எழுதினர். 20 மையங்களில் தேர்வு நடைபெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மே 23-ல் தேர்வு முடிவு எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு நாள் மற்றும் தேர்வு முடிவு வெளியாகும் தேதி ஆகியவை நடப்பு கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே (கடந்த ஜுன்) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.