பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண்: இலவச உதவி மையத்துக்கு ஏராளமான அழைப்புகள்

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண் இலவச உதவி

பிளஸ்-2 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 104 இலவச மருத்துவ ஆலோசனை மையத்தில் இதற்காக மருத்துவ குழுவினர் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு முடிவு வெளியானதில் இருந்து முதல் ஒரு மணி நேரத்தில் 104 இலவச மருத்துவ ஆலோசனை எண்ணுக்கு அழைப்புகள் குவியத்தொடங்கின.

ஒரு மணி நேரத்தில், சுமார் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் அழைப்புகள் வந்ததாகவும், நேற்று மாலை 5 மணி வரை 6 ஆயிரம் பேர் போன் செய்து ஆலோசனை பெற்றதாகவும் 104 இலவச மருத்துவ சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து 104 இலவச மருத்துவ சேவை மார்க்கெட்டிங் பிரிவு குழு தலைவர் எம்.பி.நந்தினி கூறுகையில், ‘தேர்வு முடிவு வெளியானதில் இருந்து மதிப்பெண் குறைவாக எடுத்தவர்கள், தோல்வி அடைந்தவர்கள் பலரும் போன் செய்து ஆலோசனை பெற்றனர்.

குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் அடுத்து என்ன மாதிரியான படிப்பை எதிர்கொள்வது?, மதிப்பெண் குறைந்ததால் அம்மா திட்டுகிறார்கள், அவர்களிடம் பேசி ஆலோசனை வழங்குங்கள், தோல்வி அடைந்தவர்கள் எப்படி? எப்போது மறு தேர்வு எழுதுவது? என்பது குறித்தும் கேட்டனர்.

அவர்களுக்கு எங்களுடைய குழுவை சேர்ந்த சுமார் 15 பேர் ஆலோசனை வழங்கினார்கள்’ என்றார். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதவி மையம் 11417 என்ற எண்ணுடன் செயல்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் 9 ஆயிரத்திற்கு மேற்பட்ட அழைப்புகள் இந்த மையத்துக்கு வந்துள்ளது. மறு கூட்டல், மறு மதிப்பீடு, மேல் படிப்பு தொடர்பாக ஆலோசனை கேட்டு உள்ளனர்.