கல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் புதிய திட்டத்தை தமிழக அரசும்

கல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் புதிய திட்டத்தை தமிழக அரசும் பின்பற்றுமா?

கல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் புதிய திட்டத்தை தமிழக அரசும்

கல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் புதிய திட்டத்தை தமிழக அரசும் பின்பற்றுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு | மாணவர்களின் கல்விக் கடனைத் திரும்ப செலுத்த உதவும் வகையில் கேரள மாநில அரசு அறிவித்துள்ளதைப் போன்ற திட்டத்தை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரளாவில் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த மாணவர் களுக்கு உதவும் வகையில் இரண்டு திட்டங்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

முதல் திட்டத்தின்படி, கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிப்பை முடித்த 4 ஆண்டுகளுக்குள் அத்தொகையை திரும்பச் செலுத்தலாம். இதன்படி, முதலாம் ஆண்டு கடன் தொகையில் 90 சதவீதத்தை அரசும், 10 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். 2-ம் ஆண்டில் 75 சதவீதம் தொகையை அரசும், 25 சதவீத தொகையை மாணவரும் செலுத்த வேண்டும். 3-ம் ஆண் டில் 50 சதவீத தொகையை அரசும், 50 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். 4-ம் ஆண் டில் 25 சதவீதத் தொகையை அரசும், 75 சதவீதத் தொகையை மாணவரும் செலுத்த வேண்டும்.

கடனுக்கான வட்டியை வங்கிகள் ரத்து செய்ய வேண்டும். இரண்டாவது திட்டத்தின்படி, திரும்ப செலுத்த முடியாமல் நிலுவையில் உள்ள கடன் தொகை யில் 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை மாணவர்களும் செலுத்த வேண்டும்.

அதிகபட்ச மாக ரூ.4 லட்சம் வரை கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அதேபோல், ரூ.4 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான கடன் தொகையில், அசல் தொகையில் 50 சதவீதத்தை அரசு செலுத்தும். மேலும் கடன் வாங்கிய பிறகு, சம்பந்தப்பட்ட மாணவருக்கு நிரந்தர மாக மனநலம் பாதிக்கப்பட்டாலோ, விபத்து உள்ளிட்ட காரணங்களால் 80 சதவீதம் ஊனம் அடைந்தாலோ அல்லது மரணம் அடைந்தாலோ அவர்களுக்கான கடன் தொகை முழுவதும் ரத்து செய்யப்படும்.

0அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே அரசின் இந்த அறிவிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசைப் போன்று தமிழக அரசும் தங்களுக்கு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மாணவர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே, இத்திட்டம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மாநில அளவிலான வங்கிகள் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ஒவ்வொரு காலாண்டுக்கும் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொகை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்விக் கடன் வாராத் தொகை ரூ.2,371 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இத்தொகை ரூ.2,776 கோடியாக அதிகரித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கிகள் குழுக் கூட்டத்தில் கல்விக் கடன் தொடர்பாக கேரள அரசு அறிவித்துள்ள திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அவர்கள் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினர்.

கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டால் மாணவர்கள் மட்டுமின்றி வங்கிகளும் பயன் அடையும். இவ்வாறு அதிகாரி கூறினார்.