போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவே கடினமான கேள்விகள் கேட்க

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவே கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன பிளஸ் 2 முடிவுகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவே கடினமான கேள்விகள் கேட்க

மாணவர்கள் எதிர்கால போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. முன்னதாக, தேர்வு முடிவுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை மாணவர்கள் தேர்வுகளை எழுதினர்.

இந்த குறிப்பிட்ட தேர்வுக்காலம் ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தேர்வு முடிவுகளும் எந்த தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதோ அதே தேதியில் வெளியிடப்படுகிறது.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள் தோல்வியுற்றால் அதற்காக துவண்டுவிடத் தேவையில்லை. ‘14417’ என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டால் ஆறுதல் தருவதுடன், மீண்டும் கல்வி கற்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.

அவர்கள் ஜூன் 25-ம் தேதி நடக்கும் தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுடன் கல்லூரிக்குச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது: புதிய முறை பின்பற்றப்பட்டதால் தேர்ச்சி விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, இந்தாண்டு கொடுக்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

பாடத்திட்டம் ஒன்றுதான். கொடுக்கப்பட்ட கேள்விகளில் மாற்றம் செய்யப்பட்டது. எதிர்காலத்தில் மாணவர்கள் பல்வேறு பொது, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பள்ளிப்படிப்பில் 100-க்கு 100 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட, அண்ணா பல்கலையில் கணித பாடத்தில் 21 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான், கேள்விகள் கடினமாக இருந்தன.

இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள முடியும்.

ஏழைகள் கூட அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா? பெற்றோர் மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்தால் ஆங்கில அறிவு பெறுவார்கள் என்று பிள்ளைகளை சேர்க்கிறார்கள்.

இதையும் மாற்ற அரசு பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அரசுப் பள்ளிகளில் மாற்றங்கள் செய்யப்படும்.

அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தில் சில பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே? சில பள்ளிகளில் அனுமதி வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது.

குறிப்பிட்ட 12 பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறோம். அனுமதி வழங்காதது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கம் கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். குறையும் மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, “சேர்க்கை சதவீதம் குறைவதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

இனி வருங்காலத்தில் அதுபோன்ற நிலை இருக்கக் கூடாது என்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் கழகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் அங்குள்ள மாணவர்களை அழைத்து வந்து சேர்க்க வேண்டும் என்பதற்காக, செப்டம்பர் இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தொடர்ந்து அந்த பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்றால் மாணவர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்தார்.