சிவில் சர்வீசஸ் தேர்வு

சிவில் சர்வீசஸ் தேர்வு; பணி ஒதுக்கீட்டில் புதிய முறை 3 மாத பயிற்சிக்கு பிறகே எந்த பணி என்று முடிவு

சிவில் சர்வீசஸ் தேர்வு

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில் புதிய முறையை புகுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அவர்களுக்கு அளிக்கப்படும் 3 மாத பயிற்சியின் அடிப்படையில் பணி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதிரடி மாற்றம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.

முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில், ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அவர்களுக்கு 3 மாத கால அடிப்படை பயிற்சி (பவுண்டேசன் கோர்ஸ்) அளிக்கப்படுவதற்கு முன்பே, ஒவ்வொருவருக்கும் என்ன பணி, எந்த மாநிலத்தில் பணி என்று முடிவு செய்யப்படுகிறது.

இந்த பணி ஒதுக்கீட்டு முறையில் அதிரடி மாற்றத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மத்திய அரசு சுற்றறிக்கை அதன்படி, அடிப்படை பயிற்சிக்கு பிறகுதான், ஒவ்வொருவருக்கும் எந்த அகில இந்திய பணியை ஒதுக்குவது என்றும், எந்த மாநிலத்தில் பணியாற்ற ஒதுக்கீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்படும்.

இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடிப்படை பயிற்சி முடிந்த பிறகு அகில இந்திய பணியை ஒதுக்கீடு செய்வது பற்றி ஆய்வு செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளை பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெயிட்டேஜ் மதிப்பெண் 3 மாத கால அடிப்படை பயிற்சியில் ஒவ்வொருவரின் செயல்பாடுகளுக்கும் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் கொடுப்பது பற்றி ஆய்வு செய்யுமாறும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்களையும், அடிப்படை பயிற்சியில் பெற்ற ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்களையும் கூட்டி, அதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அகில இந்திய பணி ஒதுக்கீட்டையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஒதுக்கீட்டையும் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.