செல்போன் எடுத்து வர தடை

நாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள்.

நாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது.

தேர்வை 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வுகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 16-ந்தேதி (நாளை) தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி முடிவடைகிறது. தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ-மாணவிகள் மற்றும் 36,649 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர்.

மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள். இதில் பள்ளி மாணவிகள் 4,81,371 பேர், மாணவர்கள் 4,83,120 பேர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும் உள்ளனர்.

புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மொத்தம் 17,514 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் மாணவிகள் 8,694 மற்றும் மாணவர்கள் 8,820 ஆவார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 கைதிகள் எழுதுகிறார்கள். இவர்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.

தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 5,55,621 ஆகும்.

மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் உட்பட அவர்கள் கோரிய சலுகைகள் சேர்த்து சுமார் 3,659 தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 6,900 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது.

அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும்.

மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தேர்வுகள், தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பயன் பெற்றிட தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்கள் 9385494105, 9385494115 , 9385494120, 9385494125 இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.