தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 3 மாவட்டங்களில்

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 3 மாவட்டங்களில் 5 நாட்கள் இணையதள சேவை நிறுத்தம் தமிழக அரசு அதிரடி உத்தரவு

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி 3 மாவட்டங்களில்

வன்முறை பரவாமல் இருப்பதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவையை நிறுத்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மக்கள் கூடுவதற்கு காரணம் இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்த ரகசிய உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக 22-ந் தேதியன்று 20 ஆயிரம் பேருக்கும் மேலாக கூடி, வன்முறையில் ஈடுபட்டபோது, போலீசார் எடுத்த நடவடிக்கையில் சிலர் இறந்துபோன சம்பவம், அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பப்பட்ட தகவல்கள்தான் இந்த அளவுக்கு மக்கள் கூடுவதற்கு வழி வகுத்தது.

புரளிகள் பரவின மேலும், பாதியளவு உண்மையுடனும், வன்முறையை தூண்டும் விதமாகவும், தகவல்கள் பரப்பப்பட்டதோடு, அந்த சூழ்நிலையை சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்ள முயன்றனர்.

தற்போது பொது அமைதியைக் காப்பாற்றுவதற்காக உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.

அரைகுறை உண்மைகள், புரளிகள் போன்றவை பரவுவதை தடுப்பதற்கு இணையதள சேவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தற்காலிக நிறுத்தம் எனவே, தொலைத்தொடர்பு சேவை தற்காலிக நிறுத்த (பொது அவசரம் அல்லது பொது பாதுகாப்பு) விதிகளின்படி, உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதில் திருப்தி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பொது அமைதியை காப்பாற்றும் வகையிலும், குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்காகவும், 23-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை 5 நாட்களுக்கு ஒருவருக்கு ஒருவர் தகவல் அனுப்பாத வண்ணம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ரகசிய உத்தரவின் நகல், டி.ஜி.பி. மற்றும் மாநில உளவுப்பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு) ஐ.ஜி.க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.