20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கு

20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கு

20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செயல்படும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடிப்பவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்து வருகிறது.

இதன்காரணமாக மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில், சென்னை, கடலூர் உள்ளிட்ட 12 ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மட்டும் வைத்துக்கொண்டு, வேலூர், திருச்சி, சேலம், ராமநாதபுரம் உள்ளிட்ட 20 நிறுவனங்களை மூடுவது என அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 20 இடங்களிலும் இந்தாண்டு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை எதிர்த்து அனைத்து மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் இந்த உத்தரவு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.

20 மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மூடுவதால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக வரும் ஜூன் 5-ம் தேதிக்குள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறைச் செயலர், தமிழக பள்ளிக்கல்வித்துறைச் செயலர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.