சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி

சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் தகவல்

சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி

சட்டப் படிப்புகளுக்கு இந்தாண்டு முதல் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என். சாஸ்திரி தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்தும் முகமையாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 28-ம் தேதி தொடங் குகிறது. இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி கூறியதாவது: பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் உள்ள 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.ஏ., பி.காம், பி.பி.ஏ., பி.சி.ஏ. எல்எல்பி மாண்பமை (ஹானர்ஸ்) சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் மே 28-ம் தேதி (நாளை) முதல் வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு ரூ.500, மற்றவர்களுக்கு ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அஞ்சல் வழியில் பெற ரூ.600 மற்றும் ரூ.1,100-க்கான வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க இறுதி நாள் ஜுன் 18 ஆகும்.

மேலும், சட்டப் பல்கலை., சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பி.ஏ. எல்எல்பி படிப்புகளுக்கு ஜூன் 1-ம் தேதி முதலும், எல்எல்பி மாண்பமை சட்டப் படிப்புகளுக்கு ஜூன் 26-ம் தேதி முதலும், எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு ஜூன் 27-ம் தேதியில் இருந்தும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு முதல் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, வரும் ஆண்டுகளில் அமல் படுத்தப்படும். மாண்பமை சட்டப் படிப்புகளில் மொத்தம் 780 இடங்கள் உள்ளன.

அம்பேத்கர் சட்டக்கல்லூரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தரு்மபுரி, திண்டிவனம் சட்டக் கல்லூரிகளில், ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு 1,411 இடங்களும், மூன்றாண்டு படிப்புக்கு 1,541 இடங்களும் உள்ளன.

மாண்பமை சட்டப் படிப்புகளில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும். இப்படிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் அரசாணைப்படி, உண்மையான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்.

சேர்க்கை வெளிப்படையாக நடக்கும். இதில் சேரும் மாணவர்கள் பட்டியல் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.

இந்தாண்டு சீர்மிகு பள்ளியில் உள்ள மாண்பமை படிப்புகளுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.

மற்ற கல்லூரிகளில் வழக்கம் போல் கட்டணம் இருக்கும். விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவை பரிசீலிக்கப்பட்ட பின், கவுன்சலிங் தேதி அறிவிக் கப்படும். Facebook Google Twitter EmailShare © 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu