பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்சி ? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றச்சாட்டு

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்

பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சி என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் உள்ளன.

பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வருவாய் மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரிகளும் (32 பேர்), கல்வி மாவட்ட அளவில் மாவட்ட கல்வி அதிகாரிகளும் (67 பேர்) நிர்வகித்து வருகிறார்கள்.

இதைபோல், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மாவட்ட அளவில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளும், வட்டார அளவில் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளும் (836 பேர்) நிர்வகிக்கிறார்கள்.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள 4,322 மெட்ரிகுலேஷன் பள்ளிகளை கவனிக்க 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் வகையில் மே 18-ம் தேதி ஓர் அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் உயர்நிலைப் பள்ளிகளையும் மேல்நிலைப் பள்ளிகளையும் ஆய்வு செய்துவந்த இந்த அதிகாரிகள் இனி கூடுதலாக நடுநிலைப் பள்ளிகளையும், தொடக்கப் பள்ளிகளையும் கண்காணிப்பார்கள். மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பதவியும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் பதவியும் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவி என்பதால் அப்பதவி மாவட்ட கல்வி அதிகாரி பதவியாகவே கருதப்படும். மேலும், தொடக்கக் கல்வி இயக்ககத்தில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியானது வட்டார கல்வி அதிகாரி என பெயர்மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த அதிகாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மட்டுமின்றி தனியார் பள்ளிகளையும் நிர்வகிப்பார்கள்.

இந்த அதிரடி மாற்றங்கள் தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக் கல்வி இயக்ககத்தோடு இணைப்பதற்கான முயற்சிதான் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம்சாட்டிள்ளன.

இதுகுறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறும்போது, “இந்த புதிய மாற்றங்கள் மூலம் ஆரம்பக் கல்வி இயக்கத்தையே ஒழிக்க முயற்சி நடக்கிறது.

32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பதவிகள் இல்லாமல் போய்விடும். அரசின் இந்த முடிவை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் கூறும்போது, “அரசின் தற்போதைய நடவடிக்கை, தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சிதான்.

மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் இல்லாமல் தொடக்கக் கல்வி இயக்குநர் என்ன செய்வார் என்று தெரியவில்லை.

புதிய நடவடிக்கை மூலம் தொடக்கக் கல்வி நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படும்” என்றார்.ஜெ.கு.லிஸ்பன் குமார்