தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின்

தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை !

தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின்

தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப் பள்ளிக்கு வருவார்கள் தமிழக அரசின் புதிய பாடத் திட்டம் சிபிஎஸ்இ-யை விட தரமாக இருக்கும் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை | அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட தரமானதாக இருக்கும்.

புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் அரசுப் பள்ளியை நோக்கி வருவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.

மலேசியாவைச் சேர்ந்த 42 தமிழாசிரியர்கள், 10 தமிழ் ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘தமிழ்க்கல்வி – ஓர் அறிவார்ந்த பகிர்வு’ என்ற தலைப்பில் சென்னையில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 15 தமிழறிஞர்களைக் கொண்டு 5 நாட்கள் அளிக்கப்பட உள்ள இந்த பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கிவைத்தார். விழாவில் மலேசிய கல்வித் துறை துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதன், தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி, இணை இயக்குநர் என்.லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழா முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இது அனைவரும் வியக்கும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மேலான தரம்கொண்டதாக இருக்கும். அது அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும். புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவார்கள்.

இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். ஏற்கெனவே, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் அதிகரித்துள்ளது. மலேசியாவில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

உலகத்தில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்களின் தேவையை பூர்த்தி செய்துகொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அந்நாட்டு அரசுகளுடன் இணைந்து தமிழர்களுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும் வகையில் புத்தகங்கள் வழங்கப்படும். இதற்காக ஒரு குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.