மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் 110-விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பழனிசாமி அறிவிப்பு

மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் 110-விதியின் கீழ் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் ரூ.16 கோடி செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவித்தார்.

திறன் வகுப்பறைகள் சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- பள்ளி மாணவர்களின் நலன் கருதி அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

தற்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக குடிநீர் வசதிகள் தேவைப்படும் 2,448 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 48 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் அனைத்து பாடங்களையும் கற்றுக்கொள்வதற்கு ஏதுவாக 2,283 திறன் வகுப்பறைகள் 42 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

நடப்பு கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு சீரிய முறையில் பயிற்றுவிக்க ஏதுவாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் பணியிடை பயிற்சி வழங்கப்படும்.

மேலும், தலைமை ஆசிரியர்கள் அவர்களது தலைமைப்பண்பினை மேம்படுத்திகொள்வதற்காக பயிற்சியும், ஆய்வு அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும், தேசிய ஆசிரியர் தகவுக்கான கட்டகங்கள் உள்ளடு செய்தல் சார்ந்த பயிற்சியும் மற்றும் இதர பயிற்சிகளுக்காக 35 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

மாதிரி பள்ளிகள் மாவட்டத்திற்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி வீதம் 32 மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்தும் வகையிலும், வளர்ந்துவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, இப்பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக செயல்படும் விதத்தில், ஒரு பள்ளிக்கு 50 லட்சம் ரூபாய் வீதம் 16 கோடி ரூபாய் செலவில் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன் அட்டை வழங்கும் முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்தது.

இத்திறன் அட்டையில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட திறன் அட்டையாக நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் 11 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.