மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி !

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி

மலேசிய தமிழ் ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மலேசிய ஆசிரியர்கள் 42 பேருக்கு தமிழகத்தில் முதல்கட்டமாக ஒரு வாரம் பயிற்சி அளிக்க தமிழக அரசும், மலேசிய அரசும் முடிவு செய்தது.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் 7 நாட்கள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது. மலேசிய ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் தொடக்க விழா நடைபெற்றது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி வரவேற்றார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். விழாவில் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- வரலாற்று நிகழ்ச்சி இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழக அரசும், மலேசிய அரசும் இணைந்து மலேசிய ஆசிரியர்களுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்கிறார்கள்.

அந்த அரசு தமிழர்களை அங்கீகரித்து உள்ளது. பள்ளிக்கல்வித் துறை பல மாற்றங்களை செய்து வருகிறது. புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு அடுத்த கல்வி ஆண்டில் கொண்டு வரப்படுகிறது. பிளஸ்-2 முடித்தவுடன் வேலை கிடைக்கும் உத்தரவாதத்தை புதிய பாடத்திட்டம் கொடுக்கும்.

தமிழகத்தில் 8 புதிய நூலகங்கள் தொடங்கப்பட உள்ளன.

நீட் என்கிற நுழைவுத்தேர்வுக்கு தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு உள்ளது.

இருப்பினும் 412 மையங்களில் மத்திய அரசு கொண்டு வரும் போட்டித்தேர்வை எதிர்கொள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ் படிக்க என்ன தேவையோ அதற்கான பாடப்புத்தகம் உள்ளிட்டவைகளை வழங்க திட்டம் உள்ளது.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். மலேசிய மந்திரி விழாவில் மலேசிய கல்வி துணை மந்திரி டத்தோ ப.கமலநாதன் பேசும்போது, “மலேசியாவில் இப்போது 524 தமிழ் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிகளில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

தமிழ் ஆசிரியர்களுக்கு மலேசியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எங்கள் பிரதமர் தமிழில் கையெழுத்திட்டு பெருமைப்படுத்தினார்” என்றார்.

மலேசிய நாட்டு தூதர் சரவணன் கார்த்திகேயன், துணைத்தூதரக அதிகாரி அப்துல் ரகுமான், முன்னாள் எம்.பி. பாலகங்கா, பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன், இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வித்துறை இயக்குனர் எஸ்.கருப்பசாமி, இணை இயக்குனர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.