‘நீட்’ தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு மருத்துவ கவுன்சிலுக்கு

‘நீட்’ தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு மருத்துவ கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

‘நீட்’ தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு மருத்துவ கவுன்சிலுக்கு

‘நீட்’ தேர்வுக்கான அதிகபட்ச வயது வரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர ‘நீட்’ நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுப் பிரிவு மாணவர்களில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் ‘நீட்’ தேர்வு எழுத முடியாது என சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கு எதிராக மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் உயர் நீதிமன்றத்தை அணுக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த மே 11-ம் தேதி சிபிஎஸ்இ முடிவை உறுதி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக ராஜஸ்தானைச் சேர்ந்த திரிபுவன் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், “விண்ணப்பதாரரின் வயதுக்கும் அவரது தகுதி, திறமை மற்றும் ஆற்றலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூலை 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.