பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து

பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து

பிளஸ்-1 கணித தேர்வு மிகவும் கடினம் மாணவர்கள் கருத்து

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ்-1 தேர்வு இந்த வருடம் முதல் முதலாக அரசு பொது தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று கணித தேர்வு நடைபெற்றது. காப்பி அடித்ததாக கோவை மாவட்டத்தில் மட்டும் ஒரு மாணவர் பிடிபட்டார்.

இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ-மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். எந்த கேள்வியும் புரியாமல் பலர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. சிலர் கண்ணீருடன் தேர்வு அறையில் இருந்து வந்ததை பார்க்க முடிந்தது. இது குறித்து அவர்கள் கூறியதாவது.

வினாத்தாளை வாங்கி படித்து பார்த்த போது முதலில் அது மாறி வந்துவிட்டதோ என்று எண்ணினோம். காரணம் கேட்கப்பட்ட சில கேள்விகள் மட்டுமே நேரடியாக பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன. மற்ற கேள்விகள் அனைத்தும் மிகவும் கடினம்.

சி.பி.எஸ்.இ. தேர்வில் கேட்பது போல கேள்விகள் இருந்தன. இதனால் இந்த தேர்வில் பலர் தேர்ச்சி பெறுவது சந்தேகம் தான். எனவே எங்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்வு குறித்து அரசு பள்ளி கணித ஆசிரியர் ஒருவர் கூறியதாவது.

கணித ஆசிரியர் என்ற முறையில் பிளஸ்-1 மாணவர்களுக்கு கணிதத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் சரிதான். பாடத்திட்டத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நேரடியாக கேள்விகளை கேட்காததால் மாணவர்களுக்கு புரியவில்லை. தமிழக அரசு கணித பாடத்துக்கு ஒரு புத்தகம் கொடுத்துள்ளது. அதைத்தான் நாங்கள் நடத்துகிறோம். புத்தகங்களை படித்து பார்த்து அதை சுயமாக சிந்தித்து எழுத மாணவர்களுக்கு நேரம் கிடையாது. அதே போல கற்பிக்க எங்களுக்கும் நாட்கள் போதாது.

சி.பி.எஸ்.இ.க்கு பாடத்திட்டம் குறைவு. ஆழமாக படிப்பார்கள். தமிழக பாடத்திட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் அதை அப்படியே படிக்கின்றனர். மாணவர்களுக்கு 6-ம் வகுப்பில் இருந்தே சிந்திக்கும் ஆற்றல் கொண்ட கேள்விகளை கேட்க வேண்டும். அவ்வாறு படிப்படியாக கேட்பதன் மூலம் பிளஸ்-1 மாணவர்கள் சுயமாக சிந்தித்து தேர்வு எழுதும் திறனை பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ்-1 விலங்கியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், தேர்வில் பல வினாக்கள் எளிதாக தான் இருந்தன. ஆனால் 5 மதிப்பெண் கேள்விகளில் சில, பாடத்தில் இருந்து நேரடியாக கேட்கப்படவில்லை. இதனால் சற்று கடினமாக இருந்தது என்றனர்.