தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சலுகை!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சலுகை!

தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குச் சலுகை!

இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களுக்கான சேவை உரிமம் உள்ளிட்ட சில விதிமுறைகளைத் தொலைத் தொடர்புத் துறை திருத்தியமைத்துள்ளது.

இதுகுறித்து இந்தியத் தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அலைக்கற்றையை ஏலம் எடுத்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதற்கான தொகையை செலுத்துவதற்கான கால அவகாசத்தை 16 ஆண்டுகளாக நீட்டித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் 10 ஆண்டுகளுக்குள் திரும்பச் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. அதேபோல, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வைத்திருக்கும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை அளவானது 25 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளுக்கான தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தியத் தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.7.87 லட்சம் கோடிக்கு மேல் கடன் சுமை இருக்கிறது. இத்துறையில் காணப்படும் அதிகப் போட்டி காரணமாக, இந்நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து தொழிலில் நிலைத்திருக்க தொலைத் தொடர்புத் துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.