தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு

 

தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி பரிந்துரை | ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில், “பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். அவர்கள் கல்வி வளர்ச்சி பெறவும் உதவும். எனவே இதை விருப்பப்பாட தேர்வாக 100 மணி நேரம் அல்லது 15 நாட்களுக்கு அருகிலுள்ள கிராமம் அல்லது குடிசைப்பகுதியில் மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடச் செய்யலாம்.

இதற்கு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கலாம்” என்று கூறியுள்ளார். நாட்டிலுள்ள 38,000 கல்லூரிகள் மற்றும் 8,000 பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தூய்மை இந்தியா பாடத்தை கோடை விடுமுறையில் அறிமுகப்படுத்தவும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.

இதை அமலாக்குவதும் வேண்டாம் என தவிர்ப்பதும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் முடிவை பொறுத்தது. எனினும் இது சுயநிதிக்கல்லூரி மற்றும் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களில் அரசு தலையிடும் முயற்சியாக கருதப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சி.பி.பாம்ரி கூறும்போது, “பல்கலைக்கழகத்தின் கல்வி நிர்வாகத்தில் அரசு நேரடியாக தலையிடும் செயல் இது. அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்க்கும் அமைப்பாக கல்வி நிறுவனங்கள் இருக்க முடியாது” என்றார். தூய்மை இந்தியா போன்ற சில திட்டங்களில் சிறப்பு மதிப்பெண் அளித்தால் ஒழிய மாணவர்கள் அதில் கவனம் செலுத்தாத நிலையும் உள்ளது. எனவே யுஜிசி-யின் இந்தப் பரிந்துரையை வரவேற்கும் பேராசிரியர்களும் உள்ளனர்.