சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க

சித்த மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் ரத்து டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு கிடையாது கடும் எதிர்ப்பை தொடர்ந்து மத்திய மந்திரிசபை முடிவு | டாக்டர் தொழில் புரிய தகுதி தேர்வு நடத்தும் திட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதுபோல், சித்தா உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய மத்திய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

கடும் எதிர்ப்பு இந்திய மருத்துவ கவுன்சிலில் முறைகேடுகள் நடப்பதால், அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்கும் மசோதா, கடந்த ஜனவரி 2-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், கிராமப்புறங்களில் டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா (ஆயுஷ்) ஆகிய மாற்றுமுறை மருத்துவர்கள், ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற படிப்பை முடித்த பிறகு, ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு இருந்தது.

இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளும் ஆட்சேபனை தெரிவித்தன. இதனால், அம்மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

நிலைக்குழுவின் ஆய்வு அறிக்கை, கடந்த 20-ந் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

அதில், டாக்டர் தொழில் புரிவதற்கான உரிமம் பெற தகுதி தேர்வு நடத்தும் முறையை கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு பதிலாக, நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை ஒரேமாதிரியான தேர்வாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. படிப்பு முடிந்து வெளியேறும் தேர்வு என்பதால், இந்த தேர்வு, ‘தேசிய வெளியேறும் தேர்வு’ என்று அழைக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள், இந்தியாவில் பணிபுரிய இத்தேர்வு ஒரு திறனறி தேர்வாகவும் கருதப்படும். ஆயுஷ் மருத்துவர்களுக்கு தடை மேலும், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மாற்றுமுறை மருத்துவர்கள், ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ முடித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்க்க அனுமதிக்கும் திட்டத்தையும் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் முடிவை மாநில அரசுகளிடமே விட்டுவிட தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், போலி டாக்டர்களுக்கு ஓராண்டு வரை ஜெயில் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

தேசிய மருத்துவ ஆணையத்தில், மாநில அரசு பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 3-ல் இருந்து 6 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட முடிவுகளை செயல்படுத்த தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் திருத்தம் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.