அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு

அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு, ‘டார்கெட்!’விழிபிதுங்கும் ஆசிரியர்கள்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு

அரசு பள்ளி மாணவர் சேர்க்கைக்கு, ‘டார்கெட்!’விழிபிதுங்கும் ஆசிரியர்கள் | மாணவர் சேர்க்கை அதிகரிக்காவிடில், பணி நிரவலுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.தமிழகம் முழுக்க, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. கடந்தாண்டில் இச்சிக்கலைக் களைய, ஆட்டோ, வேன்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், சேர்க்கை விகிதத்தில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. வரும் கல்வியாண்டில், தொடக்க கல்வித்துறையில், சில மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள், ‘எமிஸ்’ இணையதளத்தில் முழுமையாக திரட்டப்பட்டுள்ளன.இதோடு,ஆசிரியர் காலிப்பணியிடங்கள், உபரியிடங்கள் குறித்த, பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிக பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதோடு, மாணவர்களின் எண்ணிக்கையும், சொற்ப அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதனால், அருகாமை பள்ளிகள் இணைக்கும் திட்டம் குறித்த விவாதங்கள் நடக்கின்றன.

வரும் கல்வியாண்டில், உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவர். எனவே, சொந்த மாவட்ட பள்ளியை,தக்க வைத்து கொள்ள வேண்டுமெனில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது மட்டுமே தீர்வாக உள்ளது. ஆனால், தனியார் பள்ளிகள் அதிகளவில் உள்ளதாலும், அருகருகே உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளாலும், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குதிரை கொம்பாக இருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.இலவச ஆட்டோ, வேன் வசதி ஏற்படுத்தி தந்தாலும், பள்ளிக்கு சற்று துாரத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து, குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயங்குகின்றனர். இச்சிக்கலால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.

போதிய ஆசிரியர்கள் இல்லை! அரசு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘தமிழ் மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளுக்கும், மாணவர் சேர்க்கை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில வழி மாணவர்களுக்கு, வகுப்பு எடுக்க, பிரத்யேக ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால், குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் தயங்குகின்றனர்.

கோடையில் கற்பித்தல் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதோடு, மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், ஆசிரியர்கள் அதிக மன அழுத்தத்திற்கு, ஆளாக வேண்டிய நிலை நீடிக்கிறது’ என்றார்.