சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில்

சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பழைய நடைமுறையை அமல்படுத்த முடிவு

சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில்

சிபிஎஸ்இ வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் பழைய நடைமுறையை அமல்படுத்த முடிவு | சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளின் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததை அடுத்து, இதற்கு முன்பு தேர்வின்போது கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழைய முறையையே மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்இ சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாளும், 12-ம் வகுப்பு பொருளாதாரத் தேர்வுக்கான வினாத்தாளும் வாட்ஸ் – அப் மூலமாக முன்கூட்டியே கசிந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதனால், சிபிஎஸ்இ அமைப்பின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினை எழாமல் தடுக்க வேண்டி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று தனித்தனி வினாத்தாள்களை வடிவமைக்கும் பழைய முறையை மீண்டும் அமல்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதனால், ஓர் இடத்தில் வினாத்தாள் வெளியாவதால் அதன் தாக்கம் மற்ற இடங்களில் ஏற்படுவது குறையும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று தனித்தனி வினாத்தாள்களை வடிவமைக்கும் முறையை, சிபிஎஸ்இ கல்வி வாரியம் கடந்த 40 வருடங்களாக கடைப்பிடித்து வந்தது. இந்த மூன்று தனித்தனி வினாத்தாள்களும், டெல்லி, இந்தியாவின் மற்ற பகுதிகள், வெளிநாடுகள் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும். ஒருவேளை, எங்கேனும் வினாத்தாள் கசியும் சமயத்தில், குறிப்பிட்ட பகுதியில் உள்ள தேர்வு மையங்களில் உடனடியாக வேறு வினாத்தாளை கொடுத்து பிரச்சினையை சமாளிக்கலாம்.

இந்த முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு, ஒரே வினாத்தாளை தயாரிக்கும் முறை கொண்டுவரப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.