ஆசிரியர் பணி நியமனம் வழங்காதது

ஆசிரியர் பணி நியமனம் வழங்காதது ஏன்? உயர் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

ஆசிரியர் பணி நியமனம் வழங்காதது

ஆசிரியர் பணி நியமனம் வழங்காதது ஏன்? உயர் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு | 6 பேருக்கு ஆசிரியர் பணி நியமனம் வழங்காதது தொடர்பாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசாணை சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கும் பி.எட். பட்டம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் பட்டங்களுக்கு இணையாக கருத முடியாது என தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.

இதை எதிர்த்து, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதிய வெங்கடாச்சலம் உள்பட 6 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன், இந்த அரசாணை 2015-16-ம் கல்வியாண்டுக்கு பிறகே பொருந்தும் என்று கூறி, வெங்கடாச்சலம் உள்ளிட்ட 6 பேருக்கு பணி நியமனம் வழங்கும்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் தூக்கம் ஆனால், இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘அதிகாரிகள் அனைவரும் ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அமல்படுத்தாமல், குறட்டைவிட்டு தூங்குகின்றனர்.

இதனால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு அதிகமாக தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்த நிலை தொடர்ந்தால், ஐகோர்ட்டு மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து விடும்.

அதனால், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

காலதாமதம் இதன்படி, இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

உயர் கல்வித்துறைச் செயலர் சுனில் பாலிவால் ஆஜராகவில்லை. பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், தமிழ்நாடு உயர் கல்வி கவுன்சில் குழு துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் செயலாளர் ஆகியோர் ஆஜரானார்கள்.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, ‘விநாயகா மிஷன் பி.எட். பட்டப்படிப்பு குறித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பபெற அரசு முடிவு செய்துள்ளது.

அதனால், ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்த காலதாமதம் ஏற்பட்டது’ என்று கூறினார். அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நளினிசிதம்பரம், வக்கீல் ஆர்.என்.அமர்நாத் ஆகியோர், அரசு உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே பணி நியமன உத்தரவை மனுதாரர்களுக்கு வழங்காமல் இழுத்தடிக்கிறது’ என்று குற்றம் சுமத்தினர்.

வக்கீல் ஆர்.என்.அமர்நாத் வாதிடும்போது, ‘இப்போது கூட உயர்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகாமல், ஒரு மனுவை மட்டும் தாக்கல் செய்துள்ளார்’ என்றார்.

செயலாளர் விளக்கம் இதையடுத்து, இந்த வழக்கை மாலை 4 மணிக்கு தள்ளிவைத்த நீதிபதி, உயர்கல்வித்துறை செயலாளர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதன்படி, செயலாளர் சுனில் பாலிவால் ஆஜரானார். ‘ஒரு பல்கலைக்கழகத்திற்கு, பல்கலைக்கழகம் மானியக்குழுவும் (யு.ஜி.சி.), தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலும் அங்கீகாரம் அளித்துவிட்டால், அதன்பிறகு அந்த பல்கலைக்கழகம் வழங்கும் பட்டம் செல்லாது என அரசாணை பிறப்பிக்க முடியாது.

இந்த வழக்கில் அரசாணை தவறுதலாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கில் உயர் கல்வித்துறையின் பங்கு மிகவும் சிறியது’ சுனில் பாலிவால் விளக்கம் அளித்தார்.

பணி நியமனம் இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர்கள் 6 பேருக்கும் பணி நியமனம் வழங்கவேண்டும்.

இதற்கு, பி.எட். படிப்பு தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு குறுக்கே நிற்காது. எனவே, ஐகோர்ட்டின் உத்தரவின்படி, வருகிற 19-ந்தேதிக்குள் மனுதாரர்கள் 6 பேருக்கும் ஆசிரியர் பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும்.

அதன் விவரங்களை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த 5 அதிகாரிகளுக்கும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கிறேன் என்று கூறி வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.