அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் மும்முரம் பொறியியல் படி

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் மும்முரம் பொறியியல் படிப்புக்கு மே முதல் வாரத்தில் ஆன்லைன் பதிவு தொடக்கம் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் மும்முரம் பொறியியல் படி

பொறியியல் படிப்புக்கு மே முதல்வாரத்தில் ஆன்லைனில் பதிவை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் 586 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

இவற்றில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வு கடந்த 6-ம் தேதி நிறைவடைந்த நிலையில், தேர்வெழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு எப்போது தொடங்கும்? என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்முறையாக ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு மே முதல் வாரத்தில் தொடங்கும்.

அதன்படி, இந்த ஆண்டும் வழக்கம்போல் ஆன்லைன் பதிவை மே முதல் வாரத்தில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

மாணவர்களின் அலைச்சலைத் தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல்முறையாக ஆன்லைன் கலந்தாய்வு அறிமுகப்படுத்தப்படுவதால் அதற்கான பணிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

3 கட்டங்கள் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையானது, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆன்லைன் கலந்தாய்வு என 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட இருக்கிறது.

முதலில் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் பதிவை வீட்டில் இருந்தபடியோ, வெளியே ஏதேனும் கணினி மையத்தில் இருந்தோ மேற்கொள்ளலாம்.

இவ்வாறு ஆன்லைன் பதிவு மேற்கொள்ளும் வசதி இல்லாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் 42 இடங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்படும்.

அதன்பிறகு மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக, அவர்கள் தேர்வு செய்யும் ஏதேனும் ஒரு சேர்க்கை உதவி மையத்துக்கு அழைக்கப்படுவர்.

சான்றிதழ் சரிபார்ப்பை ஜுன் முதல் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாணவர்கள் வரும்போது அவர்களுக்கு மாணவர் சேர்க்கை கையேடு அளிக்கப்படும்.

மேலும், ஆன்லைன் கலந்தாய்வு குறித்து தேவையான விளக்கம் அளிக்கப்படும். அதன்பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும்.

இக்கலந்தாய்வு ஒவ்வொரு சுற்றாக நடத்தப்படும். ஒரு சுற்றுக்கு 15 ஆயிரம் பேர் அழைக்கப்படுவார்கள்.

ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைன் கலந்தாய்வு சுற்று தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை வரிசைப்படி ஆன்லைனில் குறிப்பிட 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். 3-ம் நாள் இரவு தரவரிசைப்படி அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்படும்.

இதுகுறித்து மறுநாள் காலை மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். அடுத்த 2 நாட்களுக்குள் மாணவர்கள் இந்த உத்தேச ஒதுக்கீட்டுப் பட்டியலுக்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.

ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை விரும்பாத மாணவர்கள் அடுத்த சுற்றில் கலந்துகொள்ளும் விருப்பத்தையும் தெரிவிக்கலாம்.

தாங்கள் தெரிவித்திருந்த வரிசைப்படி விரும்பிய கல்லூரி, பாடப்பிரிவு கிடைக்கப்பெற்ற மாணவர்கள் தங்கள் ஒப்புதலை தெரிவித்ததும் மறுநாள் காலையில் அவர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இ-மெயில் மூலமாக பிடிஎப் பைல் வடிவில் அனுப்பப்படும். அடுத்த 5 நாட்களில் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம்.