ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரே ஆண்டில்

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரே ஆண்டில் 6 தலைவர்கள் மாற்றம் தேர்வுப் பணியில் தொய்வு ஏற்படும் என தேர்வர்கள் ஆதங்கம்

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒரே ஆண்டில்

ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடந்த ஒரேயாண்டில் மட்டும் 6 தலைவர்கள் அடுத்தடுத்து மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த தொடர் மாற்றத்தால் தேர்வுப்பணிகளில் தொய்வு ஏற்படும் என தேர்வர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக விபுநய்யார் கடந்த 2014 முதல் பணியாற்றி வந்த நிலையில், 2017 பிப்ரவரி மாதம் அவர் திடீரென மாற்றப்பட்டார்.

அவருக்கு பிறகு முழுநேர தலைவர் நியமிக்கப்படவில்லை.

தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச்சேவைகள் நிறுவன நிர்வாக இயக்குநராக இருந்த காகர்லா உஷா பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார்.

வெகுவிரைவில் அவரும் மாற்றப்பட்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநரான டி.ஜெகந்நாதன் பொறுப்பு தலைவராக பணியமர்த்தப்பட்டார்.

அவரது பணிக்காலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுகள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு என தேர்வுப்பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களைத் தேர்வுசெய்ய நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண் குளறுபடி காரணமாக கடந்த டிச.11-ல் திடீரென ரத்து செய்யப் பட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் புதிய தலைவராக ஜார்கண்ட் மாநில அரசு ஐஏஎஸ் அதிகாரியான கே.சீனிவாசன் கடந்த ஜனவரி 4-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

பாலிடெக்னிக் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மறு தேர்வு நடத்துவதற்கான முயற்சியை சீனிவாசன் மேற்கொண்டார்.

மேலும், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வசதியாக ஆன்லைன் தேர்வுமுறையை அறிமுகப்படுத்தவும் அவர் திட்டமிட்டார்.

இந்த சூழ்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவர் திடீரென மாற்றப்பட்டு சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில், அவர் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முழுநேர தலைவராக அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) இயக்குநரான கே.நந்தகுமார் மார்ச் 7-ல் நியமிக்கப்பட்டார்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மதிப்பெண் குளறுபடியால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீது ஏற்பட்ட களங்கத்தையும் சந்தேகத்தையும் போக்கும் வண்ணம் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவர முயற்சி செய்தார்.

தேர்வு முடிவுகளை ஒரேவாரத்தில் வெளியிட வேண்டும் என்பது அவரது திட்டம். அதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி நந்தகுமார் மாற்றப்பட்டு புதிய தலைவராக கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநரான ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரேயாண்டில் மட்டும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 5 தலைவர்கள் அடுத்தடுத்து மிகக்குறுகிய காலத்துக்குள் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்வு வாரியத் தலைவராக இருந்த நந்தகுமார் ஐஏஎஸ் பணியிடைப் பயிற்சிக்காக உத்தரகண்ட்டில் உள்ள மசூரிக்கு செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து நேற்று முன்தினம் வெளியான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உத்தரவில் எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.

அவருக்குப் புதிய பதவியும் ஒதுக்கப்பட்டதுபோல் தெரியவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுவோர் உடனுக்குடன் மாற்றப்பட்டு வருவதால் தேர்வுப்பணிகளில் தொய்வு ஏற்படும் என தேர்வர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.