தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 23-ந் தேதி வெளியீட

தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 23-ந் தேதி வெளியீட
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிந்தது. சமூக அறிவியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

2017-18 கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் தொடங்கின. கடந்த மாதம் 1-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி கடந்த 6-ந்தேதி வரையிலும் நடந்தது. இந்த தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

இதேபோல பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 7-ந்தேதி தொடங்கி கடந்த 16-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் தேர்வுகள் நடைபெற்று வந்தது.

எஸ்.எஸ்.எல்.சி. இறுதித் தேர்வான சமூக அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. சமூக அறிவியல் தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

இதனால் அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். வாழ்த்துக்கள் பரிமாற்றம் பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

மாணவ-மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு விடைப்பெற்று சென்றனர்.

ஒட்டுமொத்தமாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை மட்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று நடந்த சமூக அறிவியல் தேர்வில் காப்பி அடித்ததாக 10 பேர் பிடிபட்டனர்.

இதில் 8 பேர் விழுப்புரம் மாவட்டத்தையும், 2 பேர் திருச்சியையும் சேர்ந்தவர்கள். பொதுத்தேர்வு முடிவுகள் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

அடுத்த மாதம் 16-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகளும், 23-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளும், 30-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த கல்வி ஆண்டில்தான் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு, நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் உயர் படிப்பு தொடர்பான எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி மாணவ-மாணவிகள் காத்திருக்கின்றனர்.

இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் நேற்றுடன் முடிவடைந்து இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.