கொரோனாவை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணை

கொரோனா நோயை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் வரையில் எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் சூடான பானங்களை செய்யும் செய்முறை விளக்கமும் சரியான அளவு குறியீட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டில் நாம் தினசரியாக பயன்படுத்தும் பொருட்களை கொண்டே தயாரிக்கும் வண்ணம் இந்த செய்முறை விளக்கம் அமைந்துள்ளது.

காலையில் யோகாசனம் செய்தல், தினசரி உணவில் ஊட்டச்சத்தான காய் மற்றும் பழ வகைகளை சேர்த்துக்கொள்ளுதல், நீராவி பிடித்தல், மிதமான வெந்நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளித்தல் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகளும் இந்த மாதிரி அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.

மஞ்சள் தூளை கண்டிப்பாக நமது உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும், ஒரு நாளைக்கு 3 -4 லிட்டர் வரையில் தண்ணீர் பருக வேண்டும் என்பன உள்ளிட்ட குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.