அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு

அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை தமிழக கூட்டுறவு
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப் பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 18 ஆயிரத்து 435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.

மதுரை ஐகோர்ட்டு தடை இருகட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹர்மீந்தர் சரண் வாதாடுகையில் கூறியதாவது:- முறைகேடுகள் கூட்டுறவு சங்க தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன.

வேண்டு மென்றே பலரிடம் வேட்பு மனுக்களை பெறாமல் நிராகரித்துவிட்டனர்.

எனவே பலரால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்ததில் வெறும் 70 ஆயிரம் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்த 70 ஆயிரம் பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

எனவே, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடைபெறாத சூழல் நிலவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், “பெரும்பாலான சங்கங்கள் மீனவர்களுக்கான சங்கங்கள். கூட்டுறவு சங்கங்களில் சுமார் 2 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.

எனவே உடனடியாக தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல்கள் நடைபெற வழிவகுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

தடை நீக்கம் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்கி கூட்டுறவு சங்க தேர்தல்களை நடத்த உத்தரவிட்டனர்.

என்றாலும் தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக் கால தடை விதித்தனர். அத்துடன், தாக்கலான மொத்த வேட்புமனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டவை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுமாறு இரு தரப்புக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற மே 3-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.