அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை : சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!!


உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந் வெங்கடேசன் முதற்கட்டமாக 40 சதவீதம் கட்டணம் வசூலித்து கொள்ளலாம். அதன் பிறகு 25 சதவீதம் வசூலித்து கொள்ளலாம் என விரிவான உத்தரவை ஏற்கனவே பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு தமிழக அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் இதுதொடர்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 40 சதவீத கட்டணத்தை வசூலிக்கப்படாமல், பள்ளிகள் முதற்கட்டமாகவே முழு கட்டணத்தையும் வசூலிக்க, பெற்றோர்களை நிர்பந்திக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து நீதிபதி, எந்தெந்த பள்ளிகள் உத்தரவை மீறி முழுமையான கட்டணத்தை வசூல் செய்கின்றன என்ற பட்டியலை வருகின்ற ஆகஸ்ட் 17ம் தேதி தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.