திருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு

திருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மையம் ஒதுக்கீடு கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படும் என பெற்றோர் புகார்

திருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு
திருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மையம் ஒதுக்கீடு கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படும் என பெற்றோர் புகார் | மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் 2018 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்த யைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால், அவரும் அவரது பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது. இதற்கென பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் 108 நகரங்களில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

இந்த ஆண்டு மாணவர்களின் வசதிக்காக நாடு முழுவதும் மொத்தம் 150 நகரங்களில் 1,921 மையங்களில் நுழைவுத் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்ட பிறகும், மாணவர்கள் விருப்பமாக தெரிவித்திருந்த 3 மையங்களைத் தாண்டி வேறு நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்துள்ளது.

திருச்சி காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மாணவரின் தந்தையும் மருத்துவருமான ஜி.திருவாசகன் ‘தி இந்து’விடம் கூறியது: தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அவர்கள் விருப்பமாக தெரிவித்த 3 தேர்வு மையங்களில் ஒன்றை ஒதுக்கீடு செய்வதுதான் முறையானது. என் மகன் திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய ஊர்களை விருப்பமாக தேர்வு செய்து விண்ணப்பித்தார்.

ஆனால், அவருக்கு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுத சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தேர்வை எழுத ஏறத்தாழ 400 கிலோ மீட்டர் தொலைவு அவர் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ரயிலில் சென்றால் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்ல முடியுமா என்பது தெரியவில்லை.

எனவே, இங்கிருந்து கார் மூலம்தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் கூடுதல் செலவு மற்றும் நேர விரயம் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

சில மாணவர்களுக்கு வட மாநிலங்களில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘தி இந்து’விடம் கூறியது: சொந்த மாவட்டத்தில் இல்லாமல், வெளி மாவட்டங்களுக்குச் செல்வதற்கே ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம். அதிலும் காலை 7.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்றால் முதல் நாளே அந்த ஊருக்குச் சென்று லாட்ஜில் தங்க வேண்டும்.

மாணவர் மட்டும் தனியாக செல்ல முடியாது, உடன் பெற்றோரும் செல்ல வேண்டும். இதற்கான செலவுகளை எல்லாம் யார் கொடுப்பது என்றார். இதுபோன்ற நிலையை தடுக்க வரும் ஆண்டுகளில் கூடுதலாக தேர்வு மையங்களை உருவாக்குவதோடு, மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படாதவாறு குறைந்த தூரத்திலேயே தேர்வு மையங்களை அமைக்க சிபிஎஸ்இ நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.