பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம் எஸ்எஸ்எல்சி தேர்வ

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முடிவடைகிறது

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம் எஸ்எஸ்எல்சி தேர்வ
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகளும் வருடாந்திர தேர்வுகளும் முடிந்து ஏப்ரல், மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது.

அதேபோல, இந்த ஆண்டு முதல்முறையாக பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி முடிவடைந்தன. எஸ்எஸ்எல்சி தேர்வு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது.

மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் வருடாந்திர தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (21-ம் தேதி) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.

ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக் கப்படும். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அனைத்து வகையான இதர வாரிய பள்ளிகளில் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்றவை) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பிற வகுப்புகளுக்கான வருடாந்திர தேர்வுகளும் முடிவடைந்து ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும், விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னதாக அறிவித்துள்ளார்.

எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதை அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எல்சி தேர்வு நிறைவு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தத் தேர்வு இன்று முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். அரசு தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்தபடி, தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளி யிடப்படும்.