குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்

குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் இணையதளத்தில் மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. தகவல்

குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2ஏ-வில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலசான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதற்கான வசதி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

அடுத்த மாதம் (மே) 4-ந் தேதிக்குள் தங்களது மூலச்சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதற்கான சேவையை மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கி வைக்க உள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் என்னென்ன சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற குறிப்பாணையும், எந்தெந்த அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் என்ற அரசு இ-சேவை மையங்களின் முகவரியுடன் கூடிய பட்டியலும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி 12-ந் தேதியன்று, தொழிலாளர் உதவி கமிஷனர் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் லேபர்) பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதற்கான தேர்வு வருகிற 29-ந் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 6 மாவட்ட தலைநகரங்களில் (சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை) நடைபெற உள்ளது. இதற்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) www.tnps-c-ex-ams.net எனும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.